அரசு அட்வைஸ்: பெண்கள் வீட்டை பெருக்கினால் போதும்!
பெண்கள் தினசரி வீட்டைப் பெருக்கி மெழுகுவது, தண்ணீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்தாலே போதும் என்று ராஜஸ்தான் அரசு நடத்தும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிவிரா பத்ரிகா என்ற இதழை ராஜஸ்தான் மாநில கல்வித்துறை மாதம்தோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் விநியோகிக்கப்படும் இந்த பத்திரிகையின் நவம்பர் மாத இதழின் 32வது பக்கத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ் என்ற பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது.
இதில், நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், குதிரே ஏற்றம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக பெப்சி, கோகோகோலா போன்ற குளிர்பானங்களையும் துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுடன் தினமும் 10 முதல் 13 நிமிடங்கள் விளையாட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன், "பெண்கள் தினசரி வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்வது, வீட்டைப் பெருக்கி கையால் துடைத்து மெழுகுவது, தொட்டிகளில் தண்ணீர் பிடித்து நிரப்புவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்" என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு பத்திரிகையில் இப்படிப்பட்ட பிற்போக்குவாத அறிவுரைகள் வெளியாகியுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
ஆரோக்கியத்திற்கான டிப்ஸ் என்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கூறுவது போலவே தலைப்பிடப்பட்டாலும் சிலவற்றை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பது கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி, இந்த விவகாரம் குறித்து விசாரித்துவிட்டு கருத்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Comments
Post a Comment